தாரா (பௌத்தம்)
தாரா அல்லது ஆர்ய தாரா திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். தாரா திபெத்திய தந்திர பௌத்தத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். இவர் நமது நற்செயல்களின் வெற்றியினால் கிடைக்கும் நன்மையின் அதிபதியாக கருதப்படுகிறார். ஒரு தந்திர தேவதையாக தாரா வஜ்ரயான பௌத்தத்தின் திபெத்திய பிரிவினரால் வணங்கப்படுகிறார். கருணை மற்றும் சூன்யத்தன்மையில் சில அந்தரங்க மற்றும் ரகசிய குணங்களை புரிந்து கொள்ள திபெத்திய பௌத்தர்கள் தாராவை வணங்குகின்றனர். ஜப்பானின் ஷிங்கோன் பௌத்தத்தில் இவர் தாரானி பொசாட்ஸு என அழைக்கப்படுகிறார்.
உண்மையில் தாரா தேவி என்பது பொதுவியல்புகளை உடைய பல போதிசத்துவர்களின் ஒரு பொதுப்பெயரே ஆகும். பௌத்தத்தில் போதிசத்துவர்கள் பல்வேறு நற்குணங்களின் உருவகங்களாகவே கருத்தப்பட்டுவருகின்றனர். அந்த வகையில், ஒரே குணத்தில் பல்வேறு இயல்புகளை இந்த பல்வேறு தாராக்கள் வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்ளலாம்.
தாரா தேவின் புகழ்பெற்ற வடிவங்கள்:
- பச்சை தாரா, உயர்ந்த செயல்களின் அதிபதி
- வெள்ளை தாரா, கருணை, நீண்ட ஆயுள் மற்றும் அமைதியுடன் தொடர்புள்ளவர்
- கறுப்பு தாரா, ஆற்றலுடன் தொடர்புடையவர்
- மஞ்சள் தாரா, செல்வ செழிப்புடன் தொடர்புடையவர்
- நீல தாரா, கோபத்துடன் தொடர்புடையவர்
- சித்தாமனி(चित्तामनि) தாரா, யோக தந்திரத்தில் வணங்கப்படும் ஒரு தாரா
- கதிரவனி(खदिरवनि) தாரா, தேக்கு வனத்தின் தாரா
இத்துடன் சேர்த்து 22 தாராக்கள் திபெத்திய பௌத்தர்களால் வணங்கப்படுகின்றனர்.
பௌத்தத்தில் தாரா தேவி
[தொகு]திபெத்திய பௌத்ததில் தாரா தேவி கருணை மற்றும் செயல்களின் போதிசத்துவராக கருதப்படுகிறார். இவர் அவலோகிதேஷ்வரரின் பெண் அம்சமாக கருதப்படுகிறார், சில கதைகளில் தாரா அவலோகிதேஷ்வரரின் கண்ணீர் துளிகளில் தோன்றியதாக கூறப்பட்டுள்ளது.
தாரா ரட்சிப்பின் தேவியாக கருதப்படுகிறார். உயிர்களின் துன்பங்களை தீர்த்து அவர்களை சம்சார பந்தத்தில் இருந்து விடுவிக்கிறார்.
தாராவின் தோற்றம் இந்து மதத்திலேயே நிகழ்ந்தது, இலட்சுமி, சரஸ்வதி, பார்வதி போல தாரா தேவியும் இன்றளவும் இந்து மதத்தில் வணங்கப்படுகிறார். 6ஆம் நூற்றாண்டில் தாரா பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருத்து நிலவுகிறது.
பிறகு தாரா, தந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்று, பிரசித்தியுடன் விளங்க ஆரம்பித்தார். தாராவின் வழிபாடு திபெத் மற்றும் மங்கோலியாவில் மிகவும் பரவலாக உள்ளது.
போதிசத்துவராக தோற்றம்
[தொகு]தாரா போதிசத்துவராகத் தோன்றியது குறித்து பல கதைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உலக மக்களின் துன்பங்களை கண்டு அவலோகிதேஷ்வரர் கண்ணீர் துளி வடித்தார் எனவும், அந்தக் கண்ணீர் துளியே தாரா தேவியாக உருமாறியது எனவும் பொதுவாக நம்பப்படுகிறது.
இன்னொரு கதையில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது. யேஷே தாவா என்ற இளவரசி பல கோடி வருடங்களுக்கு முன்பு இன்னொரு பிரபஞ்சத்தில் இருக்கிறார். பல கல்பங்களுக்கு அவள் அவளுடைய உலகத்தின் புத்தரான "டோன்யோ துரூபா"வுக்கு பூஜைகள் செய்கிறாள். அவளுக்கு புத்தரிடமிருந்து போதிசித்ததை குறித்து சிறப்பு நெறிமுறைகள் கிடைக்கின்றன. இதை அவள் செய்து முடித்த பின், சில துறவிகள் அவளிடத்தில் வந்து அடுத்த நிலைக்கு முன்னேறவேண்டுமெனில், அடுத்த பிறவில் ஆணாக பிறக்க சிறிது புண்யங்களை அர்ப்பணிக்குமாறு கூறுகின்றனர். இதை கேட்ட இளவரசி, ஆண் பெண் பாகுபாடு என்பது போதிநிலைக்கு கிடையாது எனக் கூறுகிறாள். மிகச்சிலரே உயிர்களுக்கு பெண் வடிவில் உதவுகின்றனர் என சோகத்துடன் தெரிவிக்கிறார். எனவே எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஒரு பெண் போதிசத்துவராகவே பிறக்க வேண்டுமென உறுதிபூணுகிறார். பிறகு, ஒரு கோடிவருடங்கள் தியாயனத்தில் மூழ்குகிறார். அந்த ஒரு கோடி வருட தியானத்தின் பயனாக பல கோடி உயிர்கள் சம்சாரத்தில் இருந்து விடுபடுகின்றன. இந்த நற்செயலால், அவ்வுலகத்தின் புத்தர் 'டோன்யோ துரூபா' அவள் போதிநிலை அடைந்து பல உலகங்களுக்கு தாரா தேவியாக இருப்பாள் என அவளிடத்தில் கூறுகிறார்
மந்திரங்கள்
[தொகு]கீழ்க்கண்ட மந்திரம் அனைத்து தாராக்களும் பொதுவான மந்திரமாகக் கருதப்படுகிறாது
ஓம் தாரே துத்தாரே துரே ஸ்வாஹா ॐ तारे तुत्तारे तुरे स्वाहा
வெள்ளைத் தாரா தேவிக்கு மேற்கூறிய மந்திரத்துடன் மேலும் சில சொற்கள் இணைக்கப்படுகின்றன
ஓம் தாரே துத்தாரே துரே மம ஆயு: புண்ய ஞான புஷ்டிம் குரு ஸ்வாஹா ॐ तारे तुत्तारे तुरे मम आयु: पुण्य ज्ञान पुष्टिं कुरु स्वाहा
தாராவின் பீஜாக்ஷரம் தாம்(तां) ஆகும்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள் நூல்கள்
[தொகு]- பௌத்தமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடேசன்[1] பரணிடப்பட்டது 2007-10-15 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- தாரா - பௌத்த தேவதை பரணிடப்பட்டது 2007-10-15 at the வந்தவழி இயந்திரம்
- பச்சை தாரா மற்றும் வெள்ளை தாரா
- தாராவை குறித்த கட்டுரை
- பச்சை தாராவைப் பற்றி பரணிடப்பட்டது 2007-01-20 at the வந்தவழி இயந்திரம்
- மந்திர எழுத்துக்கள் பச்சை தாரா மற்றும் சிவப்பு தாரா